12-18 வயதினருக்கான கோர்பேவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி
கோர்பவேக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஆர்.பி.டி. புரத துணைப்பிரிவு கொரோனா தடுப்பூசியாக ‘கோர்பேவேக்ஸ்’ உள்ளது. பயாலாஜிக்கல் ஈ என்ற நிறுவனம் இந்த தடுப்பூசியை தயாரித்துள்ளது. இத்தடுப்பூசியை 5 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கு 2-ம் கட்ட மருத்துவமனை பரிசோதனை நடத்துவதற்கு கடந்த செப்டம்பர் மாதம் அனுமதி அளிக்கப்பட்டது.
‘அந்தப் பரிசோதனையில், இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க வல்லது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, நாட்டின் நடப்பு கொரோனா சூழ்நிலை, பரவலான தடுப்பூசி பயன்பாட்டை கருத்தில்கொண்டு, 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோர்பேவேக்ஸ் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்’ என்று பயாலாஜிக்கல் ஈ நிறுவனம் அனுமதி கோரியிருந்தது. இந்த நிலையில், கோர்பவேக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.