ஆபத்தான முறையில் ஜன்னலை சுத்தம் செய்யும் பெண் - மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ..!
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த பெண்ணுக்கு வேடிக்கையான மற்றும் கிண்டலான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள ஷிப்ரா ரிவியரா சொசைட்டியின் நான்காவது மாடியில் வசிக்கும் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது பிளாட்டின் ஜன்னலை சுத்தம் செய்ய தன் உயிரை பணயம் வைத்துள்ளார்.
சொசைட்டியின் ஏ பிளாக்கில் வசிக்கும் பெண், நான்காவது மாடியில் உள்ள தனது பிளாட்டின் மூடிய பால்கனியின் கண்ணாடியை சுத்தம் செய்வதற்காக பால்கனியின் ஓரத்தில் திடீரென வெளியே வந்தார். அவரின் பிளாட்டிற்கு எதிர் பிளாக்கில் வசிக்கும் ஸ்ருதி தாக்கூர் இந்த சம்பவத்தை தனது மொபைல் போனில் படம் பிடித்துள்ளார்.
ஸ்ருதி செய்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “பொதுவாக அனைவரும் ஞாயிற்றுக்கிழமைகளின் மதிய உணவு நேரத்தில் தங்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பார்கள். திடீரென்று என் ஜன்னலில் இருந்து இந்தப் பெண்ணைப் பார்த்ததும், நான் ஒரு கனம் பயந்துவிட்டேன்.உடனடியாக நான் என் ஜன்னலைத் திறந்து அவரை பலமுறை அழைத்தேன், ஆனால் அவர் சுத்தம் செய்வதில் மிகவும் பிஸியாக இருந்தார், அவர் நான் கூறியதை கவனிக்கவிலை. அப்படி பால்கனியின் ஓரத்தில் நிற்பது மிகவும் ஆபத்தானது. நான் என் மகளை அவர்களின் வீட்டிற்கு அனுப்பினேன், அதன் பின் அந்த பெண் அங்கிருந்து இறங்கி உள்ளே சென்றாள்," என்று கூறினார்.
மேலும், இதுபோன்ற செயல்கள் மரணத்தை விளைவிக்கும் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக தான் இந்த வீடியோவை எடுத்ததாக ஸ்ருதி கூறினார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த பெண்ணுக்கு வேடிக்கையான மற்றும் கிண்டலான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர், அதே நேரத்தில் சிலர் அவரது வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
சமீப காலமாக சமூக ஊடகங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. பிப்ரவரி 14 அன்று, பரிதாபாத்தில் உள்ள கிராண்ட்ரா சொசைட்டியின் 12-வது மாடி பால்கனியின் ஓரத்தில் தொங்கியபடி ஒரு நபர் ஸ்டண்ட் செய்யும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.