மம்தாவின் பரிந்துரைக் கடிதத்தை திருப்பி அனுப்பிய கவர்னர் - மீண்டும் வெடித்த மோதல்...!

மேற்கு வங்காள சட்டசபையை கூட்டக்கோரும் முதல்-மந்திரி மம்தாவின் பரிந்துரையை கவர்னர் திருப்பி அனுப்பினார்.

Update: 2022-02-20 10:29 GMT
மேற்கு வங்கம்,

மேற்கு வங்காள மாநிலத்தில் கவர்னர் பதவி ஏற்ற நாள் முதல் ஜகதீப் தங்கர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மம்தா பானர்ஜி அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பது தொடர்கதையாய் நீளுகிறது. கடந்த 12-ந் தேதியன்று சட்டசபையை கவர்னர் ஜகதீப் தங்கர் முடித்துவைத்து அதுகுறித்த பதிவை டுவிட்டரில் வெளியிட்டார். இது சர்ச்சைக்குள்ளானது. கவர்னர் மாளிகையின் ஒவ்வொரு தகவல் தொடர்பையும் கவர்னர் பொதுவெளியில் கொண்டு வரும் வழக்கத்தை கொண்டுள்ளார் என்று விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மேற்கு வங்காள மாநில சட்டசபையை அடுத்த மாதம் 7-ந் தேதி கூட்டுவதற்கு கவர்னருக்கு பரிந்துரை அனுப்பினார். ஆனால் அதை கவர்னர் ஜகதீப் தங்கர் திருப்பி அனுப்பினார். 

அதையும் அவர் டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ’மார்ச் 7-ந் தேதி சட்டசபையை கூட்டுமாறு அனுப்பிய பரிந்துரை, அரசியலமைப்பு சட்டத்தின்படியான இணக்கத்துக்காக திருப்பி அனுப்ப வேண்டியதாயிற்று. ஏனென்றால் அரசியலமைப்பு விதி 166(3)-ன்கீழ், அலுவல் விதிகளுக்கு இணங்க மந்திரிசபையின் பரிந்துரையின்பேரில்தான் கவர்னர் சட்டசபையை கூட்டுகிறார்” என கூறப்பட்டுள்ளது.

மம்தாவின் பரிந்துரையை திருப்பி அனுப்பிய கவர்னர், அத்துடன் ஒரு கடிதத்தையும் எழுதி உள்ளார். அதில் அவர் அரசியல் சாசன அமைப்பின் இணக்கத்துக்காக கோப்பு திருப்பி அனுப்பப்படுகிறது என கூறி உள்ளார்.

மேற்கு வங்காள சட்டசபையை கூட்டக்கோரிய மம்தாவின் பரிந்துரையை கவர்னர் திருப்பி அனுப்பியதால் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கவர்னருக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்