ஆமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு; சமாஜ்வாடி தலைவர்களுக்கு நேரடி தொடர்பு: பா.ஜ.க. குற்றச்சாட்டு

ஆமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர்களுக்கு நேரடி தொடர்பு உள்ளது என பா.ஜ.க. குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

Update: 2022-02-19 10:20 GMT


புதுடெல்லி,


உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது.  3வது கட்ட வாக்கு பதிவு நாளை நடைபெற உள்ளது.  இந்த நிலையில், மத்திய மந்திரி அனுராக் தாகுர் கூறும்போது, பயங்கரவாதம் எனும் வரும்போது, பா.ஜ.க.வின் நோக்கம் மற்றும் எண்ணம் எப்போதும் பூஜ்ய சகிப்புதன்மையுடனேயே உள்ளது.

சமாஜ்வாடி பயங்கரவாதத்திற்கு முழு பாதுகாப்பு அளிக்கும் நிலைப்பாட்டை எடுக்கும்.  ஆமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம், மரணம் அடைந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் ஆகியவற்றை பற்றி நான் பேச வேண்டுமெனில், அதில் சமாஜ்வாடி தலைவர்களுக்கு நேரடியான தொடர்புகள் உள்ளன என கூறியுள்ளார்.

ஆமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், 49 குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றம் தண்டனை அறிவித்து உள்ளது.  அவர்களில் 38 பேருக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.  இதனை நான் வரவேற்கிறேன்.

இதன்பின்னர் அனுராக், புகைப்படம் ஒன்றை செய்தியாளர்களிடம் காட்டினார்.  அதனை குறிப்பிட்டு, இந்த படத்தில் உள்ள முகமது சைப், சமாஜ்வாடி தலைவர் ஷதாப் அகமதுவின் மகன்.  இவர் 49 பேரில் ஒருவர்.  இதுபற்றி அகிலேஷ் ஏன் அமைதியுடன் உள்ளார்?

முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் உடன் அவர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் உள்ளன.  பிரியாணி சாப்பிடுவதற்காக அவரை அகிலேஷ் அழைத்துள்ளாரா?  தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், அகமதுவின் மகன் பின்புலத்தில் இருந்து செயல்பட்டு உள்ளார்.  அவருக்கும் தொடர்புகள் உள்ளன என குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்