திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக மம்தா பானர்ஜி உறவினர் மீண்டும் நியமனம்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசில் அவருடைய சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜி, தேசிய பொதுச்செயலாளராக இருந்தார். மம்தாவுக்கு அடுத்தபடியாக அதிகார மையமாக திகழ்ந்தார். மூத்த தலைவர்களுக்கும், இளம் தலைமுறை தலைவர்களுக்கும் இடையே உட்கட்சி பூசல் நிலவியதால், கட்சியின் நிர்வாகிகள் குழுவை மம்தா பானர்ஜி கடந்த வாரம் கலைத்தார்.
இந்த நிலையில், புதிய நிர்வாகிகள் குழுவை மம்தா பானர்ஜி நேற்று அமைத்தார். அதில், அபிஷேக் பானர்ஜி மீண்டும் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதாவில் இருந்து சென்ற முன்னாள் மத்திய நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா, துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த தலைவர்கள் சுப்ரதா பக்ஷி, சந்திரிமா பட்டாச்சார்யா ஆகியோரும் துணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.