காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு
பராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.
ஸ்ரீநகர்,
வடக்கு காஷ்மீரில் உள்ள பராமுல்லா மாவட்டத்தில் உள்ள சந்த்வான் ஷீரி என்ற கிராமத்தில், பயங்கரவாதிகள் வெடிபொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் பராமுல்லா மாவட்ட போலீஸ், ராணுவம், மற்றும் சி.ஆர்.பி.எஃப். ஆகியோர் அடங்கிய பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அங்குள்ள சந்தாஃபரான் என்ற பகுதியில் ராணுவத்தினர் மற்றும் போலீசார் தேடுதல் நடத்திய போது, அங்கு பயங்கரவாதிகள் வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த தளத்தை கண்டுபிடித்து அங்கிருந்த பயங்கர வெடிபொருட்களை கைப்பற்றினர். இதில் 11 கையெறி குண்டுகள் மற்றும் 11 கிரெனேட் லாஞ்ச்சர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், ஒரு காவலர் உயிரிழந்தார், மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.