வரலாறு காணாத அளவில் விமான எரிபொருள் விலை அதிரடியாக உயர்வு..!!

2 மாதங்களில் 4-வது முறையாக விமான எரிபொருள் விலை அதிரடியாக உயர்வடைந்துள்ளது.

Update: 2022-02-16 19:26 GMT
புதுடெல்லி, 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் மற்றும் விமான எரிபொருள் போன்றவற்றின் விலை மாற்றியமைக்கப்படுகிறது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. 

இதைத்தொடர்ந்து இந்தியாவில் விமான எரிபொருள் விலை 5.2 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அதன்படி கிலோ லிட்டர் ஒன்றுக்கு ரூ.4,481.63 அதிகரித்து தற்போது ரூ.90,519.79 ஆக உயர்ந்திருக்கிறது. இது வரலாறு காணாத அதிகரிப்பு ஆகும்.

இதற்கு முன்பு கடந்த 2008-ம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்த நேரத்தில், அந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இந்தியாவில் விமான எரிபொருள் கிலோ லிட்டர் ஒன்றுக்கு ரூ.71,028.26 ஆக விற்பனையாகியதே அதிகபட்சம் ஆகும்.

தற்போதைய விலை உயர்வும், கடந்த 2 மாதங்களில் 4-வது முறையாக நிகழ்ந்திருப்பது விமான நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கொரோனா பேரிடரால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு விமான நிறுவனங்கள் ஏற்கனவே நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், இந்த எரிபொருள் விலை உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என விமான நிறுவன அதிகாரிகள் கவலை வெளியிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்