டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபரால் பரபரப்பு

டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வீட்டிற்குள் இன்று அத்துமீறி நுழைய முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-16 06:29 GMT
டெல்லி,

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வருபவர் அஜித் தோவல். இவர் டெல்லி ஜன்பாத் சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இது அஜித் தோவலின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். அந்த வீட்டியில் இதற்கு முன்னர் பிரதமராக பதவி வகித்த எல்.கே. குஜ்ரால் வசித்து வந்தார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள அஜித் தோவலின் அதிகாரப்பூர்வ வீட்டிற்குள் இன்று காலை ஒரு நபர் அத்துமீறி நுழைய முற்பட்டுள்ளார். உரிய அனுமதியின்றி தோவல் வீட்டிற்குள் நுழைய முயன்ற அந்த நபரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரித்தனர்.

அதன்பின்னர், தோவல் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்றதற்காக அந்த நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித் தோவல் வீட்டிற்குள் நுழைய முயன்ற நபர் யார் என்பது குறித்த விவரத்தை டெல்லி போலீசார் இதுவரை வெளியிடவில்லை. இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வீட்டிற்குள் நபர் அத்துமீறி நுழைய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்