பி.எம்.சி. வங்கி ஊழலில் பா.ஜனதா தலைவர்கள் கோடிக்கணக்கில் பணம் பெற்று உள்ளனர்: சஞ்சய் ராவத்

பி.எம்.சி. வங்கி ஊழலில் பா.ஜனதா கட்சி தலைவர்கள் கோடிக்கணக்கில் பணம் பெற்று உள்ளதாக சஞ்சய் ராவத் பரபரப்பு பேட்டி அளித்து உள்ளார்.

Update: 2022-02-15 19:38 GMT
சிவசேனா அலுவலகம்

சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரான சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று தாதரில் உள்ள சிவசேனா கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். சிறை செல்லும் பா.ஜனதா தலைவர்களின் பெயரை அறிவிப்பதாக தெரிவித்து இருந்ததால் அவரது பேட்டி தொடர்பாக பரபரப்பு நிலவியது.

இதற்காக சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் சிவசேனா தலைமை அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

29 பங்களாக்கள்

பத்திரிகையாளர் சந்திப்பில் சஞ்சய் நிருபம் பேசியதாவது:-

மராட்டியத்தில் கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதாவை சேர்ந்த 3 பேர் என்னை அணுகினர். தன்னை கட்சியில் தலையிட வேண்டாம் எனவும், மகாவிகாஸ் அகாடி அரசை கவிழ்த்து ஜனாதிபதி ஆட்சி நிலவ வேண்டும் என தெரிவித்தனர்.

மத்திய முகமைகளின் விசாரணை எனது வீடு உள்பட நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் நடைபெறும் என மிரட்டினர். இந்த மிரட்டலுக்கு நான் அடிபணிய மாட்டேன்.

எனக்கு சொந்தமாக 29 பங்களாக்கள் இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

நான் கூறுகிறேன். நாம் அனைவரும் பஸ் மூலம் பங்களாக்களுக்கு சுற்றுலா செல்லலாம். அந்த பங்களாக்கள் அங்கு கட்டப்பட்டு இருந்தால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன். இல்லை யெனில் புகார் தெரிவித்த நபரின் கன்னத்தில் சிவசேனா கட்சியினர் சேர்ந்து அறைய வேண்டும்.

கிரித் சோமையா மீது குற்றச்சாட்டு

சமீபத்தில் என் மீது குற்றம் சாட்டி வரும் பா.ஜனதா எம்.பி கிரித் சோமையா பா.ஜனதா கட்சிக்கு தரகர் போல் செயல்பட்டு வருகிறார். கிரித் சோமையாவின் தம்பி நீல் கிரிட் சோமையா என்பவர் பி.எம்.சி வங்கியின் ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய ராகேஷ் வாதாவன் தொழில் பங்குதாரர் ஆவர். ராகேஷ் வாதவனிடம் இருந்து பா.ஜனதா கட்சிக்கு ரூ.20 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் நீல் கிரித் சோமையா ரூ.100 கோடி அளவில் அவரிடம் இருந்து பணம் வாங்கி உள்ளார்.

இதனை வைத்து வசாயில் உள்ள கோகிவாராவில் ரூ.400 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.4 கோடிக்கு வாங்கி கம்பெனி நடத்தி வருகிறார். இந்த கம்பெனி சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி நடந்து வருகிறது. இது தொடர்பான தகவல்களை மந்திரி ஆதித்ய தாக்கரேவிடம் தெரிவித்து கிரித் சோமையா, நீல் கிரித் சோமையாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவிப்பேன்.

பிரதமரிடம் புகார்

இதைத்தவிர மத்திய முகமையின் விசாரணை நடைபெற இருப்பதாக பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஜித்தேந்திர சந்திரலால் உள்பட 4 பேர் சேர்ந்து மும்பையில் 70 கட்டுமான அதிபர்களிடம் கோடிக்கணக்கில் மாமூல் வசூலித்து வருவதாக என்னிடம் புகார் வந்து உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷாவிடம் புகார் தெரிவிக்க உள்ளேன்.

மராட்டிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான தேவேந்திர பட்னாவிசின் நெருக்கமாக இருந்து வரும் மோகித் கம்போஸ் என்பவர் ராகேஷ் வாதாவினிடம் இருந்து கோடிக்கணக்கில் ஊழல் பணத்தை பெற்று ஏராளமான கம்பெனிகள் நடத்தி வருகிறார். இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பான விசாரணை நடத்த கோரிக்கை விடுத்து உள்ளேன். இந்த தகவல்களை நான் சிறிதளவு மட்டும் தான் தெரிவித்து உள்ளேன். முழு விவரங்களை பின்வரும் நாட்களில் வெளியிடுவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்