கர்நாடகத்தில் ‘ஹிஜாப்’ அணிந்து வந்ததால் அனுமதி மறுப்பு; பள்ளி மாணவிகள் போராட்டம்
கர்நாடகத்தில் ‘ஹிஜாப்’ விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது. ஹிஜாப் அணிந்து வந்ததால் அனுமதி மறுக்கப் பட்டதை கண்டித்து பள்ளி மாணவிகள் போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் தேர்வு எழுதாமல் திரும்பி வீட்டுக்கு சென்றனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது.
‘ஹிஜாப்’ விவகாரம்
இதை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இந்து மாணவர்களும் முஸ்லிம் மாணவிகளுக்கு போட்டியாக காவி துண்டு, தலைப்பாகை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். மேலும் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்களின் இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் கர்நாடகத்தில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே கர்நாடக ஐகோர்ட்டு ஹிஜாப்-காவி துண்டு அணிந்து பள்ளிக்கு வருவதற்கு தடை விதித்து இடைக்கால தீர்ப்பு அளித்தது. இதனால் 5 நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் உயர் நிலை பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்தனர். ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஒரு சிலர் ஹிஜாப்பை கழற்ற முடியாது என்று கூறி வீட்டுக்கு திரும்பி சென்றனர்.
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது
இந்த நிலையில் கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் மீண்டு விஸ்வரூபம் எடுத்துள்ளது. நேற்றும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் முஸ்லிம் மாணவிகள் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து சென்றனர். ஆனால் ஐகோர்ட்டு மத அடையாள ஆடைகளை அணிய இடைக்கால தடை விதித்துள்ளதால், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை ஆசிரியர்கள் பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் ஹிஜாப்பை கழற்றிவிட்டு பள்ளிக்குள் செல்லலாம் என்று தெரிவித்தனர்.
ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று ஒரு சில மாணவிகளே ஹிஜாப்பை அகற்றிவிட்டு பள்ளிக்கு சென்றனர். பல மாணவிகள் ஹிஜாப்பை அகற்ற மறுத்துவிட்டு திரும்பி வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த ஹிஜாப் விவகாரத்தால் நேற்று மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டமும் வெடித்தது.
பதற்றம்
சிக்கமகளூரு மாவட்டம் இந்தாவரா அரசு பள்ளிக்கு முஸ்லிம் மாணவிகள் 153 பேர் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் நுழைவு வாயிலேேய தடுத்து நிறுத்தினார்கள். ஹிஜாப்பை அகற்றிவிட்டு பள்ளிக்குள் செல்லும்படி ஆசிரியர்கள் தெரிவித்தனர். ஆனால் ஹிஜாப்பை கழற்ற மறுத்து பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 23 பேர் எஸ்.எஸ்.எல்.சி. மாணவிகள் ஆவர். தற்போது திருப்புதல் தேர்வு நடப்பதால், ஹிஜாப்பை கழற்றிவிட்டு அவர்களை பள்ளிக்குள் செல்லும்படி ஆசிரியர்கள் வற்புறுத்தினர். ஆனால் ஹிஜாப்புக்கு அனுமதி அளிக்காவிட்டால் எங்களுக்கு தேர்வு வேண்டாம் என்றனர்.
அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் முஸ்லிம் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மாணவிகள் விடாப்பிடியாக இருந்தனர். அந்த சமயத்தில், இந்து மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த காவி துண்டை அணிய முயற்சி செய்தனர். ஆனால் ஆசிரியர்கள் அவர்களிடம் இருந்து காவி துண்டை பறித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அறிவித்து மாணவ-மாணவிகளை வெளியேற்றினர்.
ஹிஜாப்பை கழற்ற மறுப்பு
இதேபோல், சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா சிராளகொப்பாவில் உள்ள ஆர்.எம்.எஸ். பள்ளி, சிவமொக்கா பி.எச். சாலையில் உள்ள அரசு பள்ளி, அப்துல்கலாம் அரசு பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து மாணவிகள் வந்தனர். ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவிகளையும் ஹிஜாப்பை கழற்றும்படி கூறினர். ஆனால் ஹிஜாப்பை கழற்ற மறுத்த மாணவிகள், தங்களுக்கு தேர்வை விட ஹிஜாப் தான் முக்கியம் என்று கூறி பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு வந்து, மாணவிகளை சமாதானம் செய்தனர்.
மேலும், தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா, ஒன்னாளி பகுதியில் ஹிஜாப் அணிய அனுமதி மறுத்ததால் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்னாளியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகா நெல்லுதுகேரியில் உள்ள அரசு பள்ளியில் ஹிஜாப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் 28 மாணவிகள் வீட்டுக்கு திரும்பி சென்றனர்.
பெற்றோருடன் போராட்டம்
அதேபோன்று, சித்ரதுர்கா மாவட்டம் இரியூரில் அரசு பள்ளி, கலபுரகி உருது பள்ளி, பெலகாவி அரசு உண்டு உறைவிட பள்ளி, துமகூரு அரசு பள்ளி, கொப்பலில் உள்ள மவுலானா ஆசாத் அரசு பள்ளி, கதக் நகரில் உள்ள உருது பள்ளி, பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா அரசு உயர் நிலைப்பள்ளி, ஹுக்கேரியில் உள்ள திப்பு சுல்தான் பள்ளி, யாதகிரி மாவட்டம் குமரகல்லில் உள்ள அரசு பள்ளி, ஹாசன், மண்டியா, உள்பட மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று சில மாணவிகள் ஹிஜாப்பை கழற்றிவிட்டு பள்ளிக்குள் சென்றனர். ஹுக்கேரியில் உள்ள திப்பு சுல்தான் பள்ளியில் ஆசிரியர்கள் பேச்சை கேட்காமல், ஹிஜாப் அணிந்து மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். ஏராளமான மாணவிகள் ஹிஜாப்பை கழற்ற மறுத்து பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்தினார்கள். பல்வேறு பகுதிகளில் மாணவிகளுடன் அவர்களது பெற்றோரும் பள்ளிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுத்ததால், பல்வேறு பகுதிகளில் மாணவிகள் வீட்டுக்கு திரும்பினர். இதனால் பள்ளிகளில் மாணவிகள் இன்றி ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர்.
கல்லூரிகள் இன்று திறப்பு
இதனால் கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. ஹிஜாப் விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் மூடப்பட்ட பி.யூ.சி. உள்பட கல்லூரிகள் 7 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று (புதன்கிழமை) முதல் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், பள்ளிகளில் ஹிஜாப் விவகாரம் பூதாகரமாகி உள்ளதால், இந்த பிரச்சினை கல்லூரிகளிலும் எதிரொலிக்காமல் இருக்க கர்நாடக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் தீவிர முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அத்துடன் பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.