அண்ணியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர்
இமாசலபிரதேசத்தில் போதைக்கு அடிமையான நபர் தனது அண்ணியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்
சிம்லா,
இமாசல பிரதேசம் சிம்லா மாவட்டத்தில் உள்ள ரோஹ்ரு பகுதி மல்குன் கிராமத்தில் 24 வயதுடைய போதைக்கு அடிமையான அபிஷேக் நேகி தனது அண்ணி பிரியாவை (25) கோடாரியால் வெட்டிக் கொன்றதாகக் கூறப்படும் நிலையில் அவரும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக நேற்று போலீசார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் அவரது அண்ணி தனது பழத்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, அபிஷேக் நேகிக்கும், பிரியாவுக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடிபோதையில் இருந்த அபிஷேக் கோபமடைந்து கோடாரியால் பிரியாவின் தலையில் அடித்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது பக்கத்து வீட்டுக்காரர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பிரியா ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு, அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார், அதன் பின் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி அந்த நபர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய தேடி வந்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் தலைமறைவாக இருந்த அபிஷேக் நேற்று காலை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் அந்த நபர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ரோஹ்ரு பகுதி போலீஸ் அதிகாரி சமன் லால் கூறினார்.