ராணுவ அதிகாரியின் உயிரை காப்பாற்றிய டெலிவரி பாய்
மும்பையில் ராணுவ அதிகாரியின் உயிரை காப்பாற்றிய டெலிவரி பாய்க்கு பாராட்டுகள் குவித்து வருகின்றன.
மும்பை,
மும்பையை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் மன்மோகன் மலிக். இவர் 1971-ம் ஆண்டு போரில் பங்கேற்றவர்.
அவருக்கு கடந்த டிசம்பர் மாதம் 25-ந் தேதி கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. அப்போது உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை ஒரு டெலிவரி பாய் போராடி காப்பாற்றிய உணர்ச்சிகரமான சம்பவத்தை அந்த ராணுவ அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
சம்பவத்தன்று எனக்கு கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்டது. எனவே எனது மகன் என்னை காரில் லீலாவதி ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தார்.
ஆனால் துரதிருஷ்டவசமாக நாங்கள் சென்ற நேரம் பார்த்து சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கார் ஒரு அங்குலம் கூட நகர முடியாமல் நின்றுகொண்டிருந்தது. எனக்கு சுத்தமாக முடியவில்லை என்பதால் என்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேறு வழிகளை எனது மகன் சிந்திக்க தொடங்கினார்.
காரில் இருந்து இறங்கி அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களிடம் என்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்ல உதவுமாறு மன்றாடினார். ஆனால் அவ்வழியாக சென்ற யாரும் எங்களுக்கு உதவி செய்ய வரவில்லை.
அப்போது அந்த வழியாக வந்து ஸ்விக்கி டெலிவரிபாய் ஒருவர் எங்கள் நிலைமையை புரிந்துகொண்டார். கனிவான மனதுடன் என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஒப்புக்கொண்டார்.
மருனால் கிர்தாத் என்ற அந்த வாலிபர் என்னையும் எனது மகனையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு போக்குவரத்து நெரிசலுக்கு இடையே முன்னாள் இருந்தவர்களை வழிவிடுமாறு மீண்டும், மீண்டும் கத்திக்கொண்டே மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தினார். அவரின் கடும் முயற்சியால் ஆஸ்பத்திரியை அடைந்தோம். அவரின் சீரிய முயற்சியால் நான் உயிர்பிழைத்தேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு வெகுவாக பாராட்டினார்.
இந்த பதிவை வெளியிட்டதும் டெலிவரிபாயின் உதவும் குணத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவித்து வருகிறது. குறிப்பாக மும்பை போலீசார் மற்றும் ராணுவ அதிகாரிகளும் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.