மோசடியில் ஈடுபட்ட குஜராத் நிறுவனத்துக்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் கடன் அளிக்கப்பட்டது: நிர்மலா சீதாராமன்

ரூ.22 ஆயிரத்து 842 கோடி வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்ட குஜராத் நிறுவனத்துக்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் கடன் வழங்கப்பட்டது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

Update: 2022-02-14 22:01 GMT
காங்கிரஸ் விமர்சனம்

குஜராத்தை சேர்ந்த ஏ.பி.ஜி. கப்பல் கட்டுமான நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி உள்பட 28 வங்கிகளில் ரூ.22 ஆயிரத்து 842 கோடி மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அந்நிறுவனம் மீதும், அதன் நிர்வாகிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரத்தில், மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்தநிலையில், ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குனர்கள் வாரிய கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. அதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார்.

வாராக்கடன்

பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குஜராத்தை சேர்ந்த ஏ.பி.ஜி. கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு 2013-ம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்தான் கடன் கொடுக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அது வாராக்கடன் ஆனது. உண்மையில், 2013-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது.

அதன்பிறகு, அந்நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் இணைந்து ஆலோசனை நடத்தின. தடயவியல் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. எல்லா ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டன. சி.பி.ஐ.யிடம் அவை ஒப்படைக்கப்பட்டன.

டிஜிட்டல் பணம்

சி.பி.ஐ. 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்திடம் தீர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மற்ற பெரிய மோசடிகளை போலவே இதிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பா.ஜனதா ஆட்சி காலத்தில், வங்கி மோசடிகளை கண்டுபிடிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் குறைவான நேரமே போதும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த நிதி ஆண்டில், ரிசர்வ் வங்கி சார்பில் டிஜிட்டல் பணம் வெளியிடப்படும் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.

இதுபற்றி நேற்றைய பேட்டியில் கேட்டபோது, ‘‘பட்ஜெட் அறிவிப்புக்கு முன்பே, டிஜிட்டல் பணம் பற்றி ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனை தொடர்ந்து நடந்து வருகிறது. அதன்பிறகு முடிவு எடுக்கப்படும்’’ என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

மேலும் செய்திகள்