விவாகரத்து பெண்கள் முதல், ஆசிரியர் வரை: 7 மாநிலங்களில் 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது...!

7 மாநிலங்களில் 14 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய நபரை போலீசார் புவனேஸ்வரில் வைத்து கைது செய்தனர்.

Update: 2022-02-14 20:16 GMT
புவனேஸ்வர்,

14 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய நபரை போலீசார் நேற்று (திங்கள்கிழமை) புவனேஸ்வரில் வைத்து கைது செய்தனர்.

ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பட்குரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர் 1982-ல் முதல் திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு 2002-ல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருக்கும் முதல் இரண்டு மனைவிகளுக்கும் 5 குழந்தைகள் பிறந்துள்ளன.

அதன்பிறகு 2002 -ம் ஆண்டிலிருந்து 2020 ஆண்டு வரையில், அந்த நபர் மேட்ரிமோனியல் வலைதளங்கள் மூலம் நடுத்தர வயதுடைய விவாகரத்தான பெண்களை குறிவைத்து அவர்களுடன் பழகி மற்ற மனைவிகளுக்குத் தெரியாமல் அவர்களை திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு அவர்களிடமிருந்து பணம், நகை ஆகியவற்றை பெற்றுக் கொண்டு அவர்களை ஏமாற்றியுள்ளார்.

இதுவரை டெல்லி, பஞ்சாப், அசாம், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள பெண்களை ஏமாற்றி 14 திருமணம் செய்துள்ளார். அவருடைய முதல் இரண்டு மனைவிகளும் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள்.

கடைசியாக டெல்லியில் பள்ளி ஆசிரியையாக இருந்த ஒருவரை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பிறகு அவருடன் ஒடிசா தலைநகரில் தங்கி இருந்துள்ளார். அவரின் முந்தைய திருமணங்களை பற்றி தெரிந்து கொண்ட அவரது கடைசி மனைவி போலீசில் புகாரளித்துள்ளார்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 11 ஏடிஎம் கார்டுகள், 4 ஆதார் அட்டைகள் மற்றும் பிற ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

மேலும் செய்திகள்