இமாச்சல பிரதேசம்: வரும் 17ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்க அனுமதி..!
இமாச்சல பிரதேசத்தில், வரும் 17ஆம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றை திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
சிம்லா,
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத்தொடங்கியதால், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டன.
இந்த சூழலில் கொரோனா பரவல் குறையத்தொடங்கியுள்ளநிலையில், பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் உட்பட பல்வேறு செயல்பாடுகளை படிப்படியாக மீண்டும் திறக்கத் தொடங்கி உள்ளன. இந்த மாத தொடக்கத்தில், ஆஃப்லைன் வகுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது, ஒட்டுமொத்த கொரோனா சூழ்நிலையின் அடிப்படையில் இறுதி முடிவை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில், வரும் 17 ஆம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவங்கள், திரையரங்குகள், மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டவற்றை திறக்க அம்மாநில அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அம்மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. .
மேலும் ஜனவரி 1, 2016 முதல் கருணைத் தொகையின் வரம்பை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்த இமாச்சலப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, இது என்பிஎஸ் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 1, 2022 முதல் சுமார் 1.73 லட்சம் ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் வழங்கவும் இமாச்சலப் பிரதேச அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இப்போது குறைந்தபட்ச ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் ஜனவரி 2016 முதல் மாதம் ரூ.3500லிருந்து ரூ.9000 ஆக உயரும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.