ஊழல்,வேலைவாய்ப்பு இன்மை குறித்து பிரதமர் மோடி பேச மறுப்பது ஏன்? ராகுல் காந்தி கேள்வி
ஊழல், வேலை வாய்ப்பு இன்மை குறித்து பிரதமர் மோடி பேச மறுக்கிறார் என ராகுல் காந்தி சாடினார்.
அமிர்தசரஸ்,
பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. 117- தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சியும் கடும் சவால் அளிக்கும் எனத்தெரிகிறது. தேர்தலை முன்னிட்டு அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில், ஹோஷிராபூரில் இன்று பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். ராகுல் காந்தி தனது பிரசாரத்தில் கூறியதாவது: - ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என பிரதமர் மோடி தனது பிரசாரத்தின் போது கூறியிருந்தார். 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனக்கூறினார்.
யாருக்காவது இவை கிடைத்ததா? பிரதமர் ஏன் ஊழல் மற்றும் வேலைவாய்ப்பு இன்மை குறித்து பேச மறுக்கிறார். ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்தார். இதன் மூலம் பயன் அடைந்தது யார்? பிரதமர் மோடி 2-3 பில்லியனர்களுக்கு தனது கடின உழைப்பைக் கொடுக்க முயற்சித்ததால், ஒரு வருடமாக, பஞ்சாப் விவசாயிகள் குளிர்காலத்தில் பசியுடன் இருந்தனர். போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு நாடாளுமன்றத்தில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த அவரால் முடியவில்லை. அவர்களுக்கு இழப்பீடும் வழங்கவில்லை” என்றார்.