உத்தரகாண்ட், கோவா சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் - உத்தரபிரதேசத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு

உத்தரகாண்ட், கோவா சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. உத்தரபிரதேசம் 2-ம் கட்ட வாக்குப்பதிவை சந்திக்கிறது.

Update: 2022-02-13 19:23 GMT
டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக புஷ்கர்சிங் தாமி இருக்கிறார்.

சட்டசபை பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், பிப்ரவரி 14-ந் தேதி சட்டசபை தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. 2000-ம் ஆண்டு உத்தரகாண்ட் உருவான பிறகு நடக்கும் 5-வது தேர்தல் இதுவாகும்.

அங்குள்ள 13 மாவட்டங்களில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளிலும் இன்று (திங்கட்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. 81 லட்சத்து 72 ஆயிரத்து 173 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 11 ஆயிரத்து 697 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் முறையாக முற்றிலும் பெண் ஊழியர்கள் பணியாற்றும் 101 வாக்குச்சாவடிகளும், மாற்றுத்திறனாளி ஊழியர்கள் மட்டும் பணியாற்றும் 6 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

632 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 152 சுயேச்சைகளும் அடங்குவர்.

முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி, அவருடைய மந்திரிகள், மாநில பா.ஜனதா தலைவர் மதன் கவுசிக், காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி ஹரிஷ் ராவத், மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியால் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

கொரோனா கட்டுப்பாடுகளுடனும், பலத்த பாதுகாப்புடனும் தேர்தல் நடக்கிறது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதலில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால், காணொலி காட்சி மூலம் பிரசாரம் நடந்தது. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், நேரடி பொதுக்கூட்டங்களும் நடந்தன.

பா.ஜனதா வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ராகுல்காந்தி, பிரியங்கா, சமாஜ்வாடி வேட்பாளர்களுக்கு அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் வேட்பாளர்களுக்கு மாயாவதி, ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பிரசாரம் செய்தனர். நேற்று முன்தினம் மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

தனது 5 ஆண்டு சாதனைகளை சொல்லி, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பா.ஜனதா முயன்று வருகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் போராடி வருகிறது. இரு கட்சிகளுக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

பா.ஜனதா ஆளும் உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 10-ந் தேதி நடந்தது.

இந்தநிலையில், 2-ம் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. 9 மாவட்டங்களில் அடங்கிய 55 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

586 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில், சமாஜ்வாடி மூத்த தலைவர் ஆசம்கான், அவருடைய மகன் அப்துல்லா ஆசம், மாநில நிதி மந்திரி சுரேஷ் கன்னா, மந்திரியாக இருந்து சமாஜ்வாடிக்கு தாவிய தரம்சிங் சைனி ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.

இன்று தேர்தல் நடக்கும் பகுதிகள், முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கும் பகுதிகள் ஆகும். மேற்கண்ட 55 தொகுதிகளில், கடந்த தேர்தலில் பா.ஜனதா 38 தொகுதிகளையும், சமாஜ்வாடி 15 இடங்களையும், காங்கிரஸ் 2 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தன.

பா.ஜனதா ஆட்சி நடக்கும் கோவா மாநிலத்திலும் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன.

301 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 68 சுயேச்சைகளும் அடங்குவர். வேட்பாளர்களில் முதல்-மந்திரி பிரமோத் சவந்த், எதிர்க்கட்சி தலைவர் திகம்பர் காமத், முன்னாள் முதல்-மந்திரிகள் சர்ச்சில் அலிமோ, ரவிநாயக், லட்சுமிகாந்த் பர்சேகர், மறைந்த மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர்.

11 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதி பெற்றுள்ளனர்.

வழக்கமாக இரு முனை போட்டிதான் நிலவும். இந்த தடவை, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளன.

மேலும் செய்திகள்