முழு அரசு மரியாதையுடன் நடைபெற்ற தொழிலதிபர் ராகுல் பஜாஜின் இறுதிச்சடங்கு..!
பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜின் இறுதிச்சடங்கு இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.
புனே,
பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ்(83) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்கோளாறு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ராகுல் பஜாஜ் நேற்று பிற்பகல் காலமானார்.
இதனையடுத்து, தொழிலதிபர் ராகுல் பஜாஜின் உடல் புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் நகரில் உள்ள அவரது இல்ல வளாகத்தில் (பஜாஜ் ஆலை) மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இந்நிலையில் ராகுல் பஜாஜின் இறுதிச்சடங்கு இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.
அவருடைய மகன்கள் ராஜீவ் மற்றும் சஞ்ஜீவ் இறுதி சடங்குகளை செய்தனர். அங்குள்ள ஒரு மின் மயானத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார், மராட்டிய மாநில மந்திரி ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் , பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்.
முன்னணி தொழிலதிபராக விளங்கிய ராகுல் பஜாஜ், 1938ம் ஆண்டு ஜூன் 10ந்தேதி பிறந்தார். அவர் பொருளாதாரம் மற்றும் சட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். இத்துடன் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்று இருக்கிறார். இவர் 1968 ஆம் ஆண்டு நிர்வாக அலுவலராக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
மிகவும் துணிச்சலான நபராக விளங்கிய பஜாஜ், பத்ம பூஷண் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். ராஜ்யசபா எம்.பி., ஆகவும் பதவி வகித்துள்ளார். பஜாஜ் ஆட்டோ தலைவர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் ராகுல் பஜாஜ் ராஜினாமா செய்தார். அவர் இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி ஐ ஐ) தலைவராக 2 முறை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.