ராகுல் பஜாஜின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் - உத்தவ் தாக்கரே அறிவிப்பு

தொழிலதிபரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான ராகுல் பஜாஜின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.

Update: 2022-02-13 08:36 GMT
மும்பை,

பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ்(83) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்கோளாறு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ராகுல் பஜாஜ் நேற்று பிற்பகல் காலமானார். 

ஜூன் 10, 1938- ஆண்டு பிறந்த ராகுல் பஜாஜ், பொருளாதாரம் மற்றும் சட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். இத்துடன் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்று இருக்கிறார். இவர் 1968 ஆம் ஆண்டு நிர்வாக அலுவலராக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

பத்ம பூஷண் உள்ளிட்ட பல விருதுகளை ராகுல் பஜாஜ்  பெற்றுள்ளார். ராஜ்யசபா எம்.பி., ஆகவும் பதவி வகித்துள்ளார். பஜாஜ் ஆட்டோ தலைவர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் ராகுல் பஜாஜ் ராஜினாமா செய்தார்.

இன்று அதிகாலை, தொழிலதிபர் ராகுல் பஜாஜின் உடல் புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் நகரில் உள்ள அவரது இல்ல வளாகத்தில் (பஜாஜ் ஆலை) மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ராகுல் பஜாஜின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் இன்று நடைபெறும் என மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்