வாழ்க்கையை புரட்டிப்போட்ட கொரோனா: பழைய இரும்புக்கு பஸ்களை விற்கும் தொழில் அதிபர்

கொரோனா கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட பேரிழப்பில் இருந்து மீண்டு வர 10 பஸ்களை கிலோ ரூ.45-க்கு பழைய இரும்பு விலைக்கு விற்கப்போவதாக தொழில் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-02-13 00:57 GMT
திருவனந்தபுரம்,

உலகத்தையே கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. இதனால் உயிரிழந்தவர்கள் ஏராளமாக இருந்தாலும், வாழ்வாதாரத்தை இழந்தவர்களும் அதற்கு இணையாக உள்ளனர் என்றால் அது மிகையில்லை.

கேரளாவில் கொரோனாவையொட்டி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர். அதில் கொச்சியை தலைமையிடமாக கொண்டு ராய் டூரிசம் என்ற பெயரில் தனியார் பஸ் போக்குவரத்து கழகம் நடந்து வந்தது. இதன் உரிமையாளர் ராய்சன் ஜோசப் ஆவார்.

இவருக்கு மொத்தம் 20 சுற்றுலா பஸ்கள் இயங்கி வந்தன. கொரோனா கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட ராய்சன் ஜோசப் தனது 10 பஸ்களை குறைந்த விலைக்கு விற்றார். ஆனாலும் வங்கியில் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை.

இந்த நிலையில், மீதமுள்ள 10 பஸ்களையும் விற்பனை செய்ய முடிவு செய்த ராய்சன் ஜோசப் இது தொடர்பாக பலரிடம் பேசி பார்த்தார். ஆனால் யாரும் பஸ்சை வாங்க முன் வரவில்லை.

இந்த நிலையில், அவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு குறுஞ்செய்தி வெளியிட்டார். அதில் ‘தன்னிடம் உள்ள 10 பஸ்களை கிலோ ரூ.45-க்கு அதாவது பழைய இரும்பு விலைக்கு விற்பனை செய்ய தயார்’ என குறிப்பிட்டு இருந்தார். இந்த அறிவிப்பு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறிவிப்பு தனியார் பஸ் உரிமையாளர்களின் பரிதாபமான நிலையை உணர்த்துவதாக காண்டிராக்டர் கேரேஜ் ஆப்பரேட்டர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

இதுபற்றி ராய்சன் ஜோசப் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா பரவலை தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட தீவிர கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளில் 20 பஸ்களில் 10 பஸ்களை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். கடந்த வாரத்தில் 4 நாட்கள் மூணாறுக்கு செல்ல 3 பஸ்களுக்கு மட்டுமே முன்பதிவு ஆனது. வழக்கமாக மூணாறு வழித்தடத்தில் பிப்ரவரி மாதத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். ஆனால் இப்போது இந்த வழித்தடம் வெறிச்சோடி கிடக்கிறது. கடனை அடைக்க 10 பஸ்களை ஏற்கனவே விற்று விட்டேன். இப்போதும் பொருளாதார நிலை மோசமாக உள்ளது. மீதமுள்ள பஸ்களை கிலோ ரூ.45-க்கு பழைய இரும்பு விலைக்கு விற்க தயாராக இருக்கிறேன். தற்கொலை செய்ய மனமில்லை. பல சுற்றுலா ஆப்பரேட்டர்களும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்