உ.பி.யில் நாளை 2-ம் கட்ட தேர்தல்: 55 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது - வாக்குப்பதிவுக்கு தீவிர ஏற்பாடுகள்
உ.பி.யில் நாளை 2-ம் கட்ட தேர்தல் நடக்க உள்ள 55 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது.
லக்னோ,
பா.ஜ.க. ஆளுகிற உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு 7 கட்ட தேர்தலை தேர்தல் கமிஷன் கடந்த மாதம் 8-ந் தேதி அறிவித்தது.
இதில் முதல் கட்ட தேர்தல், 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் கடந்த 10-ந் தேதி அமைதியாக முடிந்தது.
2-ம் கட்ட தேர்தல், 9 மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளில் நாளை (14-ந் தேதி) நடக்கிறது.
586 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இஸ்லாமிய மக்கள் ஆதிக்கம் செலுத்துகிற பகுதி என்பதால் அரசியல் கட்சிகள் பலவும் கள நிலைமையை கருத்தில் கொண்டு அந்த சமூகத்தினர் 75 பேரை வேட்பாளர்களாக களத்தில் நிறுத்தி உள்ளன. குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சி 25 வேட்பாளர்களையும், சமாஜ்வாடி-ராஷ்டிரிய லோக்தளம் கூட்டணி 18 வேட்பாளர்களையும், காங்கிரஸ் 24 வேட்பாளர்களையும் முஸ்லிம் சமூகத்தில் இருந்து களம் இறக்கி உள்ளன.
ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சியும் இங்கு 18 வேட்பாளர்களை நிறுத்தி இருப்பது கவனத்தை ஈர்க்கிறது.
இந்த 55 தொகுதிகளில் 25 தொகுதிகளில் வெற்றி-தோல்வியை முஸ்லிம்களின் வாக்குகளும், 20 தொகுதிகளில் வெற்றி-தோல்வியை தலித் மக்களின் வாக்குகளும் தீர்மானிக்கும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த தேர்தலில் மோடி அலையில் இந்த 55 தொகுதிகளில் 38 தொகுதிகளையும், சமாஜ்வாடி 15 தொகுதிகளையும், அதன்கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 2 தொகுதிகளையும் கைப்பற்றின.
இந்த முறை விவசாயிகள் மத்தியில் நிலவும் அதிருப்தி, 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் ஆளும் பா.ஜ.க.வுக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் சமாஜ்வாடி சிறிய கட்சிகளுடன் கரம் கோர்த்து தன்நிலையை மேம்படுத்திக்கொள்ள வரிந்து கட்டுகிறது. 2012 தேர்தலில் ஆட்சியைப் பிடித்த சமாஜ்வாடி இங்கு 27 தொகுதிகளில் வெற்றிக்கனி பறித்தது கடந்த கால சரித்திரம்.
அனல் பறந்த பிரசாரம் முடிந்தது
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் இந்த 55 தொகுதிகளிலும் பிரசாரத்தில் அனல் வீசியது. ஆரம்பத்தில் பா.ஜ.க. காணொலி பிரசாரம் களை கட்டியது. 6-ந் தேதி முதல் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் பகுஜன்சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் ரோடு ஷோ, பொதுக்கூட்டங்கள் என வெளுத்துக்கட்டின.
வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை தணிக்கிற வகையில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், பா.ஜ.க. தலைவர் நட்டா ஆகியோர் தீவிர பிரசாரம் செய்தனர். வழக்கம்போல இரட்டை என்ஜின் அரசு வேண்டும் என்ற வாதத்தை பிரதமர் மோடி முன்வைத்தார்.
பகுஜன் சமாஜ், பா.ஜ.க.வுக்கும், சமாஜ்வாடி கூட்டணிக்கும் இடையே களத்தில் முனைப்புடன் உள்ளது. காங்கிரஸ் கட்சி பிரசாரத்தை பிரியங்கா காந்தி முன்னின்று நடத்தினார்.
நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் முடிந்தது.
2 கோடியே 1 லட்சத்து 42 ஆயிரத்து 441 வாக்காளர்கள், 586 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளனர்.
இந்த தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள் நவாப் காஜிம் அலி கான் (காங்கிரஸ்-ராம்பூர்), சுப்ரியா ஆரோன் (சமாஜ்வாடி-பரேலி கண்டோன்மென்ட்), தேவேந்திர நாக்பால் (பா.ஜ.க.- நாகவான்) உள்ளிட்டோர் உள்ளனர்.
நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவெளியின்றி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் தொடங்கி உள்ளன.
புஷ்கர்சிங் தமி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிற உத்தரகாண்ட் மாநிலத்தில்70 இடங்களை கொண்ட சட்டசபைக்கு ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடக்கிறது.
இங்கு பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே முக்கிய போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் உள்ளது.
இங்கு பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரசுக்காக பிரியங்கா வதேரா தீவிர பிரசாரம் செய்தனர். இங்கு 632 வேட்பாளர்கள் களத்தில் உளளனர். இங்கும் நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது.
பிரமோத் சவந்த் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிற கோவாவில் 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இங்கு பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் களத்தில் உள்ளன. 301 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இந்த தேர்தலில் முடிவு செய்யப்படுகிறது. நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது.
இந்த மாநிலங்களிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் சூடுபிடித்துள்ளன.