போக்சோ வழக்கில் சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதி புஷ்பா வி கனேடிவாலா ராஜினாமா

பாலியல் குற்ற வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா கணேடிவாலா ராஜினாமா செய்தார்.

Update: 2022-02-11 10:18 GMT
மும்பை,

தோலுடன் தோல் தொடர்பு இல்லாமல்" ஆடைகளுக்கு மேல் தீண்டுவது போக்ஸோ சட்டத்தின் கீழ் "பாலியல் தாக்குதல்" என்று அழைக்க முடியாது என்று  மராட்டிய நீதிபதி புஷ்பா வி கனேடிவாலா கடந்த ஆண்டு ஜனவரி மாதம்  தீர்ப்பளித்தார்.  இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

தற்போது மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் அமர்வில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வரும் புஷ்பா வி கனேடிவாலா பதவிக்காலம் நாளையுடன்  முடிவுக்கு வர உள்ளது. அவருக்கு பணி நீட்டிப்போ அல்லது  பதவி உயர்வோ வழங்க சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பந்துரை வழங்காத நிலையில்,  தனது பதவியில் இருந்து புஷ்பா கனேடிவாலா விலகுவதாக கடிதம் அளித்துள்ளார். 

நீதிபதியின் சர்ச்சை தீர்ப்பு என்ன?

2016ம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த சதீஸ் என்பவர் 12 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆடை மீது கை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் போக்சோவில் கைது செய்யப்பட்ட சதீஸ்க்கு  3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

இதனை எதிர்த்து குற்றவாளி தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில், கைதான சதீஸை குற்றமற்றவர் என  நீதிபதி புஷ்பா கனேடிவாலா தீர்ப்பளித்தார். ஆடைகளை களையாமல் மேலே தொடுவது பாலியல் துன்புறுத்தலில் சேராது என்றும், போக்சோ சட்டத்தின் கீழ் அது குற்றமாகாது என்றும் தீர்ப்பளித்தது சர்ச்சையானது. 

சிறுமியின் ஆடையை அகற்றாமல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது குற்றமாகாது என்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பிற்கு கண்டன குரல்கள் வலுத்ததுடன், தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தேசிய குழந்தைள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு, நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அதில், சிறுமியை ஆடையுடன் தீண்டியது பாலியல் சீண்டலாகாது என தெரிவித்து, குற்றம் சாட்டப்பட்ட சதீஸை விடுவித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 

போக்சோ சட்டத்தில் கைது செய்ய உடலோடு உடல் தீண்டியிருக்க வேண்டிய அவசியமில்லை என்ற நீதிபதி, மும்பை உயர்நீதிமன்ற கூற்றுப்படி உடலோடு உடல் தீண்டினால் தான் பாலியல் குற்றம் என குறுக்கி பொருள் கொண்டால் போக்சோ சட்டத்தின் நோக்கம் சிதைந்து விடும் என்றார்.  

மேலும் செய்திகள்