அரியானாவில் குடியிருப்பின் 6வது தளம் இடிந்து 2 பேர் உயிரிழப்பு
அரியானாவில் குடியிருப்பின் 6வது தளத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உள்பட 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
குருகிராம்,
அரியானாவின் குருகிராம் நகரில் 18 அடுக்குகள் கொண்ட குடியிருப்பு வளாகம் ஒன்று உள்ளது. இதில், தரை தளம் மற்றும் 7வது தளத்திற்கு இடைப்பட்ட முதல் மற்றும் 2வது தளத்தில் ஆட்கள் இருந்துள்ளனர். 7வது தளத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்துள்ளன.
மீட்பு பணி
இந்த நிலையில், 6வது தளத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த குழுக்கள் சம்பவ பகுதிக்கு சென்றது. குருகிராம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரும் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் அலட்சியம்
இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 4 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டுள்ளனர். கட்டிட குறைபாடுகள் பற்றி முன்பே பலமுறை குடியிருப்புவாசிகள் புகார் கூறி வந்தனர். எனினும், அவை அரசு நிர்வாக அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டு உள்ளன.
இதுபற்றி கலெக்டர் விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார். முதல்-மந்திரி கட்டாரும் மீட்பு பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.