காரில் முன்பக்கம் பார்த்து பயணம் செய்பவர்களுக்கும் ‘சீட் பெல்ட்’ கட்டாயம்..!
காரில் முன்பக்கம் பார்த்து பயணம் செய்பவர்களுக்கும் ‘சீட் பெல்ட்’ கட்டாயமாக்கப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
தற்போது கார்களில் டிரைவர், அவர் அருகே அமர்ந்து பயணிப்பவர், பின் இருக்கையில் இரு முனைகளிலும் பயணிப்பவர்கள் 2 பேர் என ‘சீட் பெல்ட்’ வசதி உள்ளது.
இனிமேல் பின் இருக்கையில் மத்தியில் உள்ளவர்களும் ‘சீட் பெல்ட்’ அணிவதற்கு வசதியாக ‘சீட் பெல்ட்’ கட்டாயம் ஆக்கப்படுகிறது.
அது மட்டுமல்ல, தற்போது பெரும்பாலான கார்களில் ‘2 பாயிண்ட் சீட் பெல்ட்’ பயன்படுத்தப்படுகிறது. இனி விமானத்தில் பயன்படுத்துவதுபோன்று ஆங்கில எழுத்தான ‘ஒய்’ வடிவ ‘சீட் பெல்ட்’தான் அனைத்து இருக்கைகளிலும் பொருத்த வேண்டும் என்பது கட்டாயம் ஆகிறது. இதனால் கார்ப்பயணம் பாதுகாப்பானதாக ஆகி விடும்.
‘3 பாயிண்ட் சீட் பெல்ட்’, ‘2 பாயிண்ட் சீட் பெல்ட்’டை விட பாதுகாப்பானது. ஏனென்றால் இதை அணிகிறபோது உடலை முழுமையாக அசையாமல் ‘பெல்ட்’ பிடித்துக்கொள்ளும். தோளையும் இறுக்கி பிடித்துக்கொள்ளும். இதனால் விபத்து ஏற்பட்டாலும் படுகாயம் தவிர்க்கப்படும். பயணி தூக்கி வீசப்பட மாட்டார்.
அந்த ‘3 பாயிண்ட் பெல்ட்’ வசதியை காரில் ஏற்படுத்துவதை கட்டாயம் ஆக்கும் அறிவிப்பை மத்திய போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் வெளியிட்டார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘காரில் முன்பக்கம் பார்த்து பயணிக்கிற அனைத்து பயணிகளுக்கும் ‘3 பாயிண்ட் சீட் பெல்ட்’டுகளை வாகன உற்பத்தியாளர்கள் வழங்குவதை கட்டாயம் ஆக்கும் கோப்பில் கையெழுத்து போட்டுள்ளேன்’’ என குறிப்பிட்டார். இந்த புதிய விதி எப்போது அமலுக்கு வரும் என்பதை மந்திரி நிதின் கட்காரி குறிப்பிடவில்லை.