தமிழகத்தில் புதிதாக 890 இயற்கை எரிவாயு நிலையங்கள்: நாடாளுமன்றத்தில் தகவல்
தமிழகத்தில் புதிதாக 890 இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று இயற்கை எரிவாயு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய பெட்ரோலியத்துறை இணை மந்திரி ராமேஸ்வர் தெலி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், “சி.என்.ஜி. என அழைக்கப்படும் அழுத்தம் ஊட்டப்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்களை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநகர எரிவாயு வினியோக அமைப்புகள் நிறுவி வருகின்றன.
இந்த வகையில் நாடு முழுவதும் 8,181 இயற்கை எரிவாயு நிலையங்களை நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் கடந்த டிசம்பர் 31-ந் தேதி வரை 3,628 நிலையங்கள் நிறுவப்பட்டு உள்ளன” என பதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், மாநில வாரியாக நிறுவப்பட்டுள்ள இயற்கை எரிவாயு நிலையங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதன்படி தமிழகத்தில் 890 நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், இதில் 68 நிலையங்கள் தற்போதுவரை நிறுவப்பட்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.