ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனு: அவசர விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரி, மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடைவிதித்தது. இதை எதிர்த்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனால் மற்றொரு பிரிவு மாணவிகள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.
இதனால் மாணவ- மாணவிகள் சீருடைகள் அணிய கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தற்போது தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க இருக்கிறது.
இதற்கிடையே கர்நாடக மாநிலம் முழுவதும் ஹிஜாப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கல்லூரிக்கு வெளியே இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து பல மாநில அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து சொல்ல தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் பரவியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கல்லெறி சம்பவங்கள் நடைபெறுகின்றன. கர்நாடக மாநில சுப்ரீம் கோர்ட்டில் உள்ள ஹிஜாப் தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்ற வேண்டும் என்றும், இந்த மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு கர்நாடக மாநில சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தலையிடுவது முறையல்ல என்றும் ஏன் தலையிட வேண்டும் என கூறி எந்தவொரு குறிப்பிட்ட தேதியும் ஒதுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு மறுத்துள்ளது.