பெண்ணுக்கு, ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் - திருமணம் ஆகி 16 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்ததால் மகிழ்ச்சி....!

கோட்டயம் அருகே பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தன. திருமணம் ஆகி 16 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்ததால் மகிழ்ச்சி அடைந்தார்.

Update: 2022-02-10 04:19 GMT
பாலக்காடு,

கோட்டயம் மாவட்டம் அதிரம்புழா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி பிரசன்ன குமாரி. இவர்களுக்கு கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் நடந்து 16 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று டாக்டர்களை சந்தித்து சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசன்ன குமாரி கர்ப்பம் அடைந்தார். இதனால் தம்பதி மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் பிரசன்ன குமாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை கோட்டயத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்தபோது, வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

சுக பிரசவத்துக்கு வாய்ப்பு இல்லை என்பதால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை வெளியே எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அறுவை சிகிச்சை செய்து 4 குழந்தைகளும் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டன. அவை முறையே 1 கிலோ 148 கிராம், 1 கிலோ 108 கிராம், 1 கிலோ 12 கிராம், 1 கிலோ 80 கிராம் எடையில் இருந்தன. பிரசவத்துக்கு பிறகு தாயும், குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த பெண்ணின் பிரசவ செலவை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.

மேலும் செய்திகள்