‘ஹிஜாப்’-காவி துண்டு அணியும் விவகாரம்: பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு அமல்..!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவை அமல்படுத்தி போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகா மாநிலத்தில் ‘ஹிஜாப்’-காவி துண்டு அணியும் விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதன் எதிரொலியாக, பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவை அமல்படுத்தி போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.
உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவர்கள் காவி துண்டை அணிந்து வந்து போராட்டம் நடத்தினர். அங்கு தொடங்கிய போராட்டம் தற்போது விஸ்வரூபம் எடுத்து உள்ளது. கடலோர பகுதிகளான தட்சிண கன்னடா, உடுப்பியிலும், வடகர்நாடகமான பாகல்கோட்டையிலும், மலைநாடு மாவட்டங்களான குடகு, சிவமொக்காவிலும் இந்த போராட்டம் வலுத்து உள்ளது.
சர்க்கரை நகரான மண்டியாவிலும், அரண்மனை நகரமான மைசூருவிலும் இந்த போராட்டம் கால்பதித்து உள்ளது. உடுப்பியில் நேற்று முன்தினம் இந்து, முஸ்லிம் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 மாணவர்களின் மண்டை உடைந்தது. சிவமொக்கா, தாவணகெரேயில் 3 தாலுகாக்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை ‘ஹிஜாப்’-காவி துண்டு அணியும் விவகாரம் தொடர்பாக 19 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் முன்பு போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் தலைநகரான பெங்களூருவில் ‘ஹிஜாப்’-காவி துண்டு விவகாரத்தில் பள்ளி, கல்லூரிகள் முன்பு இதுவரை போராட்டம் நடக்கவில்லை. இந்த நிலையில் மாணவர்கள் போராட்டத்தை தடுக்க பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்களை சுற்றி 144 தடை உத்தரவை அமல்படுத்தி நேற்று பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த சில தினங்களாக ‘ஹிஜாப்’-காவி துண்டு அணியும் விவகாரத்தில் சில பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பெங்களூருவில் இது மாதிரியான போராட்டங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் பள்ளிகள், பி.யூ.கல்லூரிகள், பட்டப்படிப்பு கல்லூரிகள், கல்வி நிறுவனங்களை சுற்றியுள்ள 200 மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கல்வி நிறுவனங்கள் முன்பு கூடவும், போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு 9-ந் தேதி (நேற்று) முதல் வருகிற 22-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.