புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் உதவியதை பிரதமர் மோடி விரும்பவில்லை? பிரியங்கா காந்தி பதிலடி!

கொரோனா இரண்டாவது அலையின் போது நாட்டில் தொற்று அதிகரித்து இருந்தபோதிலும், பிரதமர் மோடி ஏன் பேரணிகளை நடத்தினார் என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2022-02-08 07:38 GMT
பனாஜி,

நாடாளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி மக்களவையில் நேற்று பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கி பேசினார்.

கொரோனா தொற்றின் நெருக்கடியை நாடு கையாள்வது குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளித்த பிரதமர் மோடி,  "தொற்றுநோயை நிர்வகித்த விதத்தில் இந்தியா ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தது.பல தேர்தல் தோல்விகளுக்குப் பிறகும் காங்கிரஸின் ஆணவம் போகவில்லை" என்றார்.

மேலும் அவர்,  "கொரோனாவின் முதல் அலையின் போது காங்கிரஸ் எல்லா வரம்புகளையும் தாண்டியது. ​​காங்கிரஸ் மும்பை ரயில் நிலையத்திற்குச் சென்று அப்பாவி மக்களைப் பயமுறுத்தியது. மேலும் மும்பையை விட்டு வெளியேற  இலவச ரயில் டிக்கெட்டுகளை வழங்கியது, இதனால் பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் கொரோனா வேகமாக பரவியது" என்று கூறினார்.

இந்நிலையில், பனாஜியில் நேற்று பேசிய பிரியங்கா காந்தி, "தனது வீடுகளுக்குத் திரும்ப வழியில்லாதவர்கள், கால் நடையாகத் திரும்பி வருபவர்களுக்கு யாரும் உதவக்கூடாது என்று பிரதமர் விரும்புகிறாரா? அவருக்கு என்ன தான் வேண்டும்? கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் போது நாட்டில் தொற்று அதிகரித்து இருந்தபோதிலும், பிரதமர் மோடி ஏன் பேரணிகளை நடத்தினார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்