டெல்லியில் தொடர்ந்து மோசமான நிலையில் நீடிக்கும் காற்று மாசு
டெல்லியில் இன்று காலை காற்றின் தரக்குறியீடு 280 என்ற அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் பல மாதங்களாக காற்று மாசு அதிகரிப்பது பெரும் பிரச்சினையாக நிலவுகிறது. வாகன நெரிசல் காரணமாகவும், அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பதாலும் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிலேயே இருந்து வருகிறது.
தொடர் காற்று மாசு காரணமாக டெல்லி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். பலருக்கு சுவாசிப்பதில் சிரமம், கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 280 ஆக இருந்ததாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியை ஒட்டியுள்ள நொய்டா, குருகிராம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு முறையே 297 மற்றும் 200 என்ற அளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரத்தை பொறுத்தவரை தர குறியீடு 50 இருந்தால் நல்லது என்றும், 50 முதல் 100-குள் இருந்தால் திருப்திகரமானது என்றும், 101 முதல் 200-க்குள் இருந்தால் மிதமானது என்றும், 201-ல் இருந்து 300-க்குள் இருந்தால் மோசமானது என்றும் 301-ல் இருந்து 400-க்குள் இருந்தால் மிக மோசமானது என்றும், 401-ல் இருந்து 500-க்குள் இருந்தால் கடுமையானது என்றும் அளவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.