16 வருடம் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

இடுக்கி அருகே 16 வருடம் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்

Update: 2022-02-07 11:20 GMT
திருவனந்தபுரம்

இடுக்கி மாவட்டம் காந்தலூர் பகுதியை சேர்ந்த சலீம் குமார் (40) என்பவர் தனது கூட்டாளி மாதவன் என்பருடன் சேர்ந்து காந்தளூர் பெரடி பள்ளம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி என்பவரை கொலை செய்ய முயன்றதாக கடந்த 2005-ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளிவந்த இருவரம் தலைமறைவாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் போலீசார் தீவிரமாக தேடியும் இருவரும் சிக்கவில்லை. 
இந்த நிலையில் மாதவன் கடந்த ஆண்டு மறையூர் அருகே பாறையில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பின்னர் சலீம் குமாரை மட்டும் போலீசார் தொடர்ந்து தேடிவந்தனர். தலைமறைவாக இருந்த சலீம் குமார்  மலப்புரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  சம்பவ இடத்துக்கு விரைந்த மறையூர் போலீசார், அங்கு ஒரு மரக்கடையில் வேலைபார்த்த சலீம் குமாரை கைது செய்தனர். பின்னர் மறையூருக்கு கொண்டுவரப்பட்ட சலீம் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 16 வருடங்களுக்கு பிறகு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்படுகின்றது.

மேலும் செய்திகள்