ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ! பிரதமர் மோடி இன்று பதிலுரை...!
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு, பிரதமர் மோடி இன்று மாலை மக்களவையில் பதில் அளித்து உரை நிகழ்த்துகிறார்.
புதுடெல்லி,
கடந்த மாதம் 31ம் தேதி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் துவக்க நாளான்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து மறுநாள் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் மத்திய அரசு குறித்து கடும் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் மக்களவையில் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை பதில் அளித்து பேசுகிறார்.
அப்போது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மாநிலங்களவையில் நடைபெறும் விவாதத்தில் அவர் பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமரின் பதிலுரையைத் தொடர்ந்து பட்ஜெட் தொடர்பாக 11 மணி நேர விவாதம் நடைபெற இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இன்று மாநிலங்களவை காலையில் ஒருமணி நேரம் ஒத்தி வைக்கப்படுகிறது.
இதனிடையே ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை மந்தரி அமித் ஷா இன்று பாராளுமன்றத்தின இரு அவைகளிலும் அறிக்கை தாக்கல் செய்கிறார்.