ஒயின் விவகாரம்: மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை கையில் எடுப்பேன் - அண்ணா ஹசாரே எச்சரிக்கை

சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக மராட்டிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-02-06 10:40 GMT
மும்பை.

கடந்த 2011ஆம் ஆண்டு வலுவான லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊழலுக்கு எதிரான ஒரு மாபெரும் இயக்கத்தை முன்னெடுத்தவர் அண்ணா ஹசாரே.

அப்போது அவர் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் அரசின் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. அதன் பின்னரே நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், மராட்டிய  அரசுக்கு எதிராக அண்ணா ஹசாரே போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஒயின் விற்பனை தொடர்பாக மராட்டிய அரசு வெளியிட்டுள்ள உத்தரவு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் உண்ணாவிரதப் போராட்டத்தைத் மீண்டும் தொடங்க உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாகக் கடந்த பிப.3ஆம் தேதியே மராட்டிய அரசுக்குக் கடிதம் எழுதியதாகவும் இருப்பினும், இதுவரை அதற்கு அரசு பதில் அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மராட்டிய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "மாநில அரசிடம் இருந்து எந்த பதிலும் வராததால் இந்த நினைவூட்டல் கடிதத்தை அனுப்புகிறேன். சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகைக் கடைகளில் மது விற்பனைக்கு அனுமதி வழங்க மாநில அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இந்த முடிவு அரசுக்குத் துரதிர்ஷ்டவசமானது, வரும் தலைமுறையினருக்கு இது ஆபத்தானது. 

இந்த முடிவை எதிர்த்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளேன். இது தொடர்பாக முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி (அஜித் பவார்) ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன், ஆனால் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இந்த உத்தரவை ரத்து செய்யவில்லை என்றால் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளேன். 

போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து குணமடைய வைப்பது தான் அரசின் கடமை. ஆனால், வருமானத்தைக் கருத்தில் கொண்டு அரசு இதுபோன்ற முடிவுகளை எடுத்துள்ளது துரதிர்ஷ்டவசமானது" என்று அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்,

மராட்டிய அரசு  சூப்பர் மார்க்கெட்கள் உள்ளிட்ட கடைகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அம்மாநில அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்