இந்திய எல்லையில் நூதன முறையில் கரன்சியை கடத்த முயற்சி
இந்திய எல்லையில் நூதன முறையிலான கரன்சி கடத்தல் முயற்சியை பி.எஸ்.எப். படையினர் முறியடித்து உள்ளனர்.
அகர்தலா,
திரிபுராவில் கோகுல்நகர் பகுதியில் சர்வதேச எல்லையில், எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதில், இந்தோ-வங்காளதேச சர்வதேச எல்லை பகுதியில் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் நூதன முறையில் கரன்சி கடத்தலில் ஈடுபட முயன்றுள்ளனர்.
அதனை படையினர் தடுத்து நிறுத்தி, முறியடித்து உள்ளனர். சைக்கிள் ஒன்றின் டயருக்குள் வங்காளதேச நாட்டு கரன்சிகளை பதுக்கி வைத்து கடத்த முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்நாட்டு மதிப்பின்படி, 9.97 லட்சம் டக்கா கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இதற்கு முன் நேற்று முன்தினம் (வெள்ளி கிழமை) பி.எஸ்.எப். படையினர் மற்றும் அசாம் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், ரூ.3.03 லட்சம் போலி இந்திய கரன்சிகளின் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.