கொரோனாவுக்கு எதிராக 5 கோடி ‘கோர்பிவேக்ஸ்’ தடுப்பூசி கொள்முதல்: மத்திய அரசு நடவடிக்கை
கொரோனாவுக்கு எதிரான 5 கோடி கோர்பிவேக்ஸ் தடுப்பூசிகளை வாங்குவதற்கு மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது.
கோர்பிவேக்ஸ் தடுப்பூசி
அமெரிக்காவின் டெக்சாஸ் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி, ஹூஸ்டன் பெய்லர் மருத்துவ கல்லூரி, டைனாவேக்ஸ் டெக்னாலஜிஸ் ஆகியவை கூட்டாக உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி கோர்பிவேக்ஸ் ஆகும்.
இந்த தடுப்பூசியை இந்தியாவில் ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல் இ நிறுவனம் தயாரித்து வழங்க உரிமம் பெற்றுள்ளது.
2 டோஸ் தடுப்பூசி
இந்த ஆர்.பி.டி. புரத தடுப்பூசிக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அவசர பயன்பாட்டு ஒப்புதலை வழங்கி உள்ளது. இந்த தடுப்பூசியை 28 நாள் இடைவெளியில் செலுத்த வேண்டும். இதை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையில் வைக்க வேண்டும்.
5 கோடி டோசுக்கு ஆர்டர்
இந்த தடுப்பூசியின் 5 கோடி டோஸ்களை வினியோகம் செய்வதற்கு பயாலஜிக்கல்-இ நிறுவனத்துக்கு மத்திய அரசு ஆர்டர் வழங்கி உள்ளது.
இந்த 5 கோடி தடுப்பூசி ஆர்டரை மத்திய அரசின் சார்பில் பொதுத்துறை நிறுவனமான எச்.எல்.எல். லைப்கேர், பயலாஜிக்கல்- இ நிறுவனத்துக்கு கடந்த ஜனவரி மாத இறுதியில் வழங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த தடுப்பூசியின் விலை ஒரு டோசுக்கு சரக்கு, சேவை வரியின்றி ரூ.145 என தகவல்கள் கூறுகின்றன.
இந்த தடுப்பூசியை எந்த பிரிவினருக்கு செலுத்துவது என்பதை மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
இருப்பினும், முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளை தற்போது சுகாதார பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும், இணைநோயுடைய மூத்த குடிமக்களுக்கும் செலுத்தி வரும் நிலையில், இதை விரிவுபடுத்துவது தொடர்பாக தொழில் நுட்பக்குழுக்களிலும், சுகாதார அமைச்கத்தின் நோய்த்தடுப்பு பிரிவிலும் விவாதிக்கப்படுவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.