ஊட்டச்சத்துணவு பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை: பிரதமர் மோடி

ஊட்டச்சத்துணவு பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

Update: 2022-02-05 19:43 GMT
ஊட்டச்சத்துணவு பாதுகாப்பு

ஐதராபாத் புறநகர் படன்சேருவில் இக்ரிசாட் என்று அழைக்கப்படுகிற சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா கொண்டாட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் அவர் பேசியதாவது:-

இந்தியா உணவு பாதுகாப்புடன் தன்னை நிறுத்திக்கொள்ளவில்லை. விவசாய உற்பத்தியில் அதிகாரம் வழங்கலுக்கும், ஊட்டசத்துணவு பாதுகாப்புக்கும் அதிக முன்னுரிமை வழங்குகிறது.

இந்த பணியில் வேளாண் பல்கலைக்கழகங்களும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகமும், சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து செயல்பட வேண்டும்.

டிஜிட்டல் விவசாயம்

டிஜிட்டல் விவசாயம் நமது எதிர்காலம் மற்றும் இந்தியாவை மாற்றுவதில் முக்கிய காரணி ஆகும். இந்தியாவில் உள்ள திறமையான ஆராய்ச்சியாளர்கள் இதில் மாபெரும் வேலைகளைச் செய்ய முடியும்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயிகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைப் பார்க்க வேண்டும்.

நதிகள் இணைப்பு

நீர் பாதுகாப்பின்கீழ் நதிகளை இணைத்து, அதிக நிலங்களை பாசனத்தின்கீழ் கொண்டு வருகிறோம். குறைந்த அளவிலான நீர் பயன்பாட்டு திறனை அதிகரிக்க நுண்நீர்ப்பாசனத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

பருவநிலை சவால்களை எதிர்கொள்வதில் உலக சமூகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் 15 வேளாண் பருவநிலை மண்டலங்களும், 6 பருவங்களும் உள்ளன. அதனால்தான் விவசாயத்தில் நமக்கு மாறுபட்ட, பழமையான அனுபவம் உள்ளது.

சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒன்றிணைத்து உழவர் உற்பத்தி அமைப்புகளாக மிகப்பெரிய சந்தை சக்திகளாக ஆக்குகிறோம். இது ஒட்டுமொத்த விவசாய துறையின் அளவையும், மதிப்பையும் உயர்த்துகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.






மேலும் செய்திகள்