மாணவிகள் பர்தா அணியும் விவகாரம்: குழந்தைகளிடம் அரசியல் நோக்கத்தில் விஷத்தை விதைக்க வேண்டாம் - குமாரசாமி
கர்நாடகத்தில் மாணவிகள் பர்தா அணியும் விவகாரத்தில் குழந்தைகளிடம் அரசியல் நோக்கத்தில் விஷத்தை விதைக்க வேண்டாம் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பர்தா விவகாரம்
பெண்களின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு பேடி பசாவோ, பேடி படாவோ என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் மாநில அரசு பர்தா விவகாரத்தை கொண்டு வந்து முஸ்லிம் பெண் குழந்தைகளுக்கு எதிராக செயல்படுகிறது. கொரோனா நேரத்தில் கல்வி நிலையங்கள் சரியாக செயல்படாததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கஷ்டப்படுகிறார்கள.
இத்தகைய கடினமான நேரத்தில் பர்தா விவகாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் நல்லிணக்கம் பாழ்படுத்தப்படுகிறது. மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் இந்த விவகாரத்தை தேசிய கட்சிகள் கைவிட வேண்டும். எந்த பகை உணர்வும் இல்லாத குழந்தைகளிடம் அரசியல் நோக்கத்தில் விஷத்தை விதைக்க வேண்டாம். இந்த விவகாரத்தை கைவிடுவது தான் நல்லது.
வேலையில்லா திண்டாட்டம்
இத்தகைய விவகாரத்தை முதல்-மந்திரி மேலும் வளர்க்க அனுமதிக்கக்கூடாது. கடலோர மாவட்டங்களில் சில கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பர்தா அணிந்து வரும் நடைமுறை உள்ளது என்பது எனது கவனத்திற்கு வந்துள்ளது. எந்த கல்வி நிறுவனத்தில் பர்தா அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதோ அங்கு அதே நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
இப்போது வந்து சிலர், பர்தா அணிய ஏன் அனுமதி கொடுத்தனர் என்று கேட்கிறார்கள். ஒருபுறம் வேலையில்லா திண்டாட்டம், கொரோனா, விலைவாசி உயர்வு பிரச்சினைகள் உள்ளன. இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இத்தகைய நேரத்தில் ஒரு பயமான சூழலை ஏற்படுத்தக்கூடாது. இதுவரை நடைபெற்று வந்த பழைய நடைமுறையே தொடர அனுமதிக்க வேண்டும். இந்த நடைமுறையை யாரும் மாற்ற வேண்டாம்.
அரசியல் செய்யக்கூடாது
இதுபோன்ற சிக்கலான விவகாரங்களில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்யக்கூடாது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவருக்கும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற பித்து பிடித்துள்ளது. பா.ஜனதாவினருக்கும், வாக்குகளை பெற வேண்டும் என்ற மனநிலை ஏற்பட்டுள்ளது. மாணவிகள் பர்தா அணிவதை சித்தராமையா நியாயப்படுத்துகிறார். ஆனால் டி.கே.சிவக்குமார், எங்கு வாக்குகள் போய்விடுமோ என்று அஞ்சி அதுபற்றி பேச மறுக்கிறார்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.