பா.ஜ.க.வின் முதல் மக்களவை உறுப்பினர் காலமானார்! பிரதமர் இரங்கல்
1984ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 மக்களவை உறுப்பினர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
ஐதராபாத்,
மக்களவையில் பா.ஜ.க.வின் சார்பில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பழம்பெரும் தலைவர் ஜங்கா ரெட்டி காலமானார். அவருக்கு வயது 87.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலைக்கு பின், 1984ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திராவின் ஹனுமகொண்டா நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் பிரதமர் பி வி நரசிம்மராவை தோற்கடித்து பாஜக சார்பில் முதல் முறையாக எம்.பி. ஆனார். அந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 மக்களவை உறுப்பினர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர் நட்டா, தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திர சேகர ராவ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி கூறியிருக்கும் இரங்கல் செய்தியில், “ஸ்ரீ சி ஜங்கா ரெட்டி தனது வாழ்க்கையை பொது சேவைக்காக அர்ப்பணித்தவர். ஜனசங்கம் மற்றும் பா.ஜ.க.வை வெற்றியின் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளில் அவர் ஒரு அங்கமாக இருந்தார். பலரது மனங்களிலும், மனங்களிலும் இடம் பிடித்தார். அவர் பல காரியகர்த்தாக்களையும் ஊக்கப்படுத்தினார். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது.
கட்சியின் பாதையின் மிக முக்கியமான கட்டத்தில் பாஜகவிற்கு திறம்பட குரல் கொடுத்தார். அன்னாரது மகனிடம் பேசி ஆறுதல் கூறினேன்.ஓம் சாந்தி” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Shri C Janga Reddy Garu devoted his life to public service. He was an integral part of the efforts to take the Jana Sangh and BJP to new heights of success. He made a place in the hearts and minds of several people. He also motivated many Karyakartas. Saddened by his demise.
— Narendra Modi (@narendramodi) February 5, 2022