பிரபல பாம்பு பிடி வீரர் வாவா சுரேஷ் உடல்நிலையில் முன்னேற்றம்

பிரபல பாம்பு பிடி வீரர் வாவா சுரேஷ் உடல்நிலையில் குறிப்பிட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சூப்பிரண்டு தகவல் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-02-03 11:48 GMT
கோப்புப்படம்
பெரும்பாவூர்,

கடந்த ஜனவரி 30ஆம் தேதியன்று கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள குறிச்சி என்ற பகுதியில் ஒரு வீட்டில் மாட்டு தொழுவத்தில் ஒரு நாகப்பாம்பு சிக்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அதனைப் பிடிக்க கேரளாவின் பிரபல பாம்பு பிடி வீரரான வாவா சுரேஷ் சென்றார். 

அவர் பாம்பை பிடித்து சாக்கில் அடைக்க முயன்ற போது, அந்த பாம்பு அவரது வலது தொடையில் கடுமையாக தீண்டியது . அதன் பின்னர் அவர் அந்த பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்துவிட்டு, முதலில் கோட்டயம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையிக்கு சென்று முதலுதவி பெற்றார். பின்னர் சிறப்பு சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்க மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார். 

அதன்படி அவருக்கு அங்கு தனி மருத்துவர் குழு அமைக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தற்போது அவரது உடல்நிலை குறித்த தகவல்களை கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சூப்பிரண்டு டாக்டர் டி.கே. ஜெயகுமார் தலைமையிலான மருத்துவர் குழு  வெளியிட்டது. அதில்,

முதலில் 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த போது அவரது உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் அவரது உடல் நிலை மேலும் மோசமானது. பின்னர் உடனடியாக மருத்துவக் குழு சிறப்பு சிகிச்சை அளித்தது. அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வாவா சுரேஷின் உடல்நிலையில் தற்போது ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்