சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்படும்! மத்திய அரசு தகவல்

2022ம் ஆண்டில், 19 விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-03 10:42 GMT
புதுடெல்லி,

நிலவை ஆராய்ச்சி செய்ய தயாரிக்கப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்படும்  என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பிலும், எக்சோஸ்பியர் என்ற வளிமண்டல அடுக்கிலும் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டது. நிலவு குறித்த ஆய்வுகளில் இது குறிப்பிடத்தகுந்த கண்டுபிடிப்பாக கருத்தப்படுகிறது.

இதற்கு அடுத்ததாக சந்திரயான்-2 விண்கலம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் இருந்த ரோவர் என்ற கருவியின் மூலம் நிலவில் தரையிறங்கி, அதன் மேற்பரப்பை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். ஆனால் செப்டம்பர் 7, 2019 அன்று நிலவில் தரையிறங்கிய போது ‘லேண்டர்’ கருவி நிலவில் மோதியதால், அந்த திட்டம் தோல்வியடைந்தது. இருப்பினும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கருவி, தொடர்ந்து நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில், நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறுகையில்,

சந்திரயான்-3 விண்கலத்திற்கான அடிப்படை பணிகள் மற்றும் சோதனைகள் நிறைவடைந்துவிட்டதாகவும் அதனை ஆகஸ்ட் மாதத்தில்  விண்ணுக்கு ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் விண்வெளி திட்டமாக  ‘ரிசாட்-1ஏ’ என்று அழைக்கப்படும் பூமியை பார்வையிடும் செயற்கைக்கோள், பிப்ரவரி 2வது வாரத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது என்று அறிவியல் மற்ரும் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

அதனை தொடர்ந்து 2022ம் ஆண்டில், மேலும் இதுபோன்ற 19 விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்