அருவியில் குளிக்க சென்ற 3 வடமாநில தொழிலாளர்கள் பலி
இடுக்கி அருகே அருவியில் குளிக்க சென்ற 3 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
திருவனந்தபுரம்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜா காடு குத்துக்கள் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஏலக்காய் தோட்டத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த துளிப் (வயது 20), ரோஷினி (20), அஜய் (21), ஆகியோர் 3 பேரும் வேலை செய்து வந்தனர்
கடந்த 1-ம் தேதி இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் உள்ள அருவியில் குளிக்க சென்றுள்ளனர். குளிக்க சென்றவர்கள் மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இவர்கள் காணாமல் போனது குறித்து சக தொழிலாளர்கள் தோட்ட உரிமையாளரிடம் கூறியுள்ளனர். தோட்ட உரிமையாளர் ராஜா காடு போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ராஜா காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மூன்று பேரும் குளிக்கச் சென்ற அருவி அருகே இறந்து கிடப்பதை அப்பகுதியிலுள்ள சிலர் தெரிவித்தனர்.
இது குறித்து தகவலை போலீசுக்கு கொடுத்தனர். போலீசார் நெடுங்கண்டம் தீயணைப்பு துறையினர் உதவியுடன் 3 பேரி உடல்களை வெளியே கொண்டுவந்தனர்.
இதுகுறித்து போலீசார் ஒருவர் கூறுகையில்,
3 பேர் உடல்களும் சுமார் 200 அடி பள்ளத்தில் பாறைகளுக்கு இடையே சிக்கிய நிலையில் கிடந்தது
குளிக்க சென்ற போது கால் தவறி அருவியின் மேலே இருந்து கீழே விழுந்து இறந்திருக்க வாய்பு உள்ளது.
இவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.