அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது மயங்கி விழுந்து போலீஸ் உயிரிழப்பு
காலை நேரத்தில் நடைபெறும் வழக்கமான அணிவகுப்பு (பரேட்) நிகழ்ச்சியின் போது மயங்கி விழுந்து போலீஸ் உயிரிழந்தார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் அதிவிரைவு போலீஸ் படை பிரிவில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தவர் மகேஷ் மோர். 27 வயதான போலீஸ் கான்ஸ்டபிள் மகேஷ் தானே சகரத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அதிகவிரைவு படைப்பிரிவில் உள்ள போலீசார் அனைவரும் இன்று காலை வழக்கமான அணிவகுப்பு (பரேட்) நிகச்சியில் பங்கேற்றனர். அதில், கான்ஸ்டபிள் மகேஷூம் பங்கேற்றார்.
அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மகேஷ் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த சக காவலர்கள் அவரை மீட்டு தானே சிவில் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மகேஷை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இதனால், சக போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உயிரிழந்த மகேஷின் உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அணிவகுப்பின் போது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் பிரேதபரிசோதனையிலேயே மகேஷின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெரியவரும். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.