உத்தரகாண்ட் காவல் துறையில் 40 சதவீத வேலைவாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்படும் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜக அரசு எதுவும் செய்யவில்லை என பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.

Update: 2022-02-02 16:54 GMT
டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காணொலி வாயிலாக தேர்தல் அறிக்கையை வெளியிட, அனைத்து தொகுதிகளிலும் அது நேரலை செய்யப்பட்டது. 

தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து பிரியங்கா காந்தி பேசியதாவது:-

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், காவல் துறையில் 40 சதவீத வேலைவாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்படும். 40 சதவீத அரசுப் பணிகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500-க்குள் கொண்டு வரப்படும். 

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜக அரசு எதுவும் செய்யவில்லை. எனவே, மாற்றத்தை கொண்டு வருவதற்கு, மக்கள் தங்கள் சக்திவாய்ந்த ஆயுதமாக வாக்குகளை பயன்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியால் மாற்றத்தை கொண்டு வர முடியும். நீங்கள் விழித்தெழுந்து, உங்கள் உரிமைகளுக்காகவும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் போராடினால் மட்டுமே மாற்றம் சாத்தியமாகும். 

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் இரட்டை இன்ஜின் எனப்படும் இன்ஜின் வேலை செய்வதை நிறுத்திவிட்டது.

நாடு முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை ரூ.14,000 கோடி உள்ளது. பிரதமருக்கு இரண்டு விமானங்கள் வாங்குவதற்கு செலவழிக்கப்பட்ட ரூ.16,000 கோடியை அதற்கு பயன்படுத்தினால், நிலுவைத்தொகையை எளிதாக வழங்கியிருக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்