1½ லட்சம் அஞ்சலக வங்கிகள் இணையம் மூலம் இணைக்கப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள 1½ லட்சம் அஞ்சலக வங்கிகள் இணையம் மூலம் இணைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டில் நாட்டில் உள்ள 1½ லட்சம் அஞ்சலக வங்கிகளும் இணையம் (கோர் பேங்கிங்) மூலம் இணைக்கப்படும். இதனால், அந்த கணக்குகளை நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஏ.டி.எம். ஆகியவை மூலம் கையாள முடியும். அஞ்சலக கணக்குகளுக்குள் ஆன்லைனில் பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். வேறு வங்கிகளின் கணக்குடனும் பண பரிமாற்றம் செய்யலாம்.கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு இந்த வசதி உதவிகரமாக அமையும்.
மின்னணு பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கிகளை வர்த்தக வங்கிகள் அமைக்கும். ‘சிப்’ பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும். இது, ஏ.டி.எம். கார்டு வடிவத்தில் இருக்கும்.
நகர்ப்புற திட்டமிடலுக்காக உயர்மட்ட குழு அமைக்கப்படும். வர்த்தகம் செய்ய உகந்த சூழ்நிலை, வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை ஆகியவற்றுக்கு அடுத்தகட்ட பணி தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.