ஒமைக்ரான் பரவல்: ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஒமைக்ரான் பரவல் காரணமாக ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஐ.சி.எம்.ஆர் சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், ஐசிஎம்ஆர் தலைமை இயக்குனர் பல்ராம் பார்கவா ஆகியோர் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பி உள்ள அந்த கடிதத்தில், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் சற்று காலதாமதம் ஆவதால் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளிலும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கும்படி அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெவ்வேறு இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை முகாம்களை அமைத்து, அதில் மருத்துவ மற்றும் துணை மருத்துவ ஊழியர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும், வீட்டு பரிசோதனை கருவிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.