ஒமைக்ரான் எதிரொலி; புதுச்சேரியில் வரும் ஜனவரி 31 வரை இரவு ஊரடங்கு அமல்
புதுச்சேரியில் வருகிற 2022ம் ஆண்டு ஜனவரி 31ந்தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
புதுச்சேரி,
நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் சூழலில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு மத்திய உள்விவகார அமைச்சகம் முன்னனெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
புதுச்சேரியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு நடந்து வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகள் மற்றும் ஒமைக்ரானை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, வருகிற 2022ம் ஆண்டு ஜனவரி 31ந்தேதி வரை, வைகுண்ட ஏகாதசி தவிர்த்து இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.