மராட்டியத்தில் இன்று திடீரென அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு; 3-வது அலை அச்சம்...!
மராட்டியத்தில் நேற்று 3 ஆயிரத்து 900 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு பெருமளவு அதிகரித்துள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் 2-வது அலை ஏற்பட்டு மக்களை ஆட்டிப்படைத்தது. அதன்பிறகு மாநிலத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. நவம்பர் மாதம் முதல் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-க்கும் குறைவாகவே இருந்தது.
இதற்கிடையில், கடந்த சில நாட்களாக மராட்டியத்தில் தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. மராட்டியத்தில் நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதேபோல், நேற்று அம்மாநிலத்தில் 3 ஆயிரத்து 900 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றைய பாதிப்புடன் ஒப்புடும் போது மராட்டியத்தில் இன்று கொரோனா பாதிப்பு பெருமளவு அதிகரித்துள்ளது.
அதன்படி, மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 5 ஆயிரத்து 368 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது நேற்றைய பாதிப்பான 3 ஆயிரத்து 900-ஐ விட பெருமளவு அதிகமாகும். இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66 லட்சத்து 70 ஆயிரத்து 754 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1 ஆயிரத்து 193 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 65 லட்சத்து 7 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 18 ஆயிரத்து 217 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்து 518 ஆக அதிகரித்துள்ளது
அதேவேளை மராட்டியத்தில் இன்று 198 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்களின் மொத்த 450 ஆக அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களில் 125 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மராட்டியத்தில் இன்று திடீரென அதிகரித்த தினசரி பாதிப்பால் கொரோனாவின் 3-வது அலை ஏற்படுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.