காந்தி குறித்து அவதூறு கருத்து: வழக்குப்பதிவு ‘வருத்தமில்லை’ - சாமியார் காளிசரண்

மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளபோதும் அதில் வருத்தமில்லை என சர்ச்சை சாமியார் கூறியுள்ளாற்.

Update: 2021-12-28 11:06 GMT
ராய்ப்பூர்,

மத்தியபிரதேசம் தலைநகர் ராய்ப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து மதம் தொடர்பான மத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மராட்டியத்தை சேர்ந்த காளிசரண் மகாராஜா என்ற சாமியாரும் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய சாமியார் காளிசரண், ‘காந்தியை கொன்றதற்காக நாதுராம் கோட்சேவை வணங்குகிறேன்’ என்றார்.

மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சாமியார் காளிசரண் மீது ராய்ப்பூர் போலீசார் பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சாமியார் காளிசரணை கைது செய்ய போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால், காளிசரண் தற்போது போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில், தலைமறைவாக உள்ள காளிசரண் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் பேசிய சாமியார் காளிசரண், காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக என்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு நான் வருத்தப்படவில்லை. சுதந்திரம் அடைந்த பின்னர் சர்தார் வல்லபாய் படேல் நாட்டின் முதல் பிரதமர் ஆகாததற்கு காந்தி தான் காரணம். நேரு-காந்தி குடும்ப அரசியலை ஊக்குவித்ததற்கும் காந்தி தான் காரணம். 

சர்தார் வல்லபாய் படேல் நாட்டின் பிரதமராகியிருந்தால் அமெரிக்காவை விட இந்தியா அதிக பலம் வாய்ந்ததாக மாறியிருக்கும். நான் மகாத்மா காந்தியை தேசத்தந்தையாக கருதவில்லை’என்றார்.

சாமியார் காளிசரண் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அவரை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்