இரவில் ஊரடங்கு... பகலில் லட்சக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்க அழைப்பு - சொந்த கட்சியையே சாடிய பாஜக எம்.பி.
இரவில் ஊரடங்கு... பகலில் லட்சக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்க அழைப்பா? என கருத்து தெரிவித்து சொந்த கட்சி தலைமைக்கு எதிராக எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார்.
லக்னோ,
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு உத்தரபிரதேசத்தில் கடந்த 25-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், திருமண நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர ஊடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளபோதும் பகல் நேரத்தில் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. இதனால், தேர்தல் பிரசாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து சொந்த கட்சியையே எம்.பி. விமர்சனம் செய்துள்ளார். பாஜக எம்.பி.யான வருண் காந்தி தனது சொந்த கட்சியையே விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக வருண் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இரவு நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்துவது, பகல் நேரத்தில் லட்சக்கணக்கான மக்களை பேரணியில் பங்கேற்க அழைப்பது சாதாரண மக்களின் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
’உத்தரபிரதேச மருத்துவ உள்கட்டமைப்பினை கருத்தில் கொண்டு ஒமைக்ரான் தொற்று பரவுவதை நிறுத்த வேண்டுமா? அல்லது நமது தேர்தல் அதிகாரத்தை வெளிப்படுத்த வேண்டுமா? என்பதில் எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும் என்றார்.