டெல்லியில் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது- முதல் மந்திரி அறிவிப்பு
டெல்லியில் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தப்பட்டுவிட்டதாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மக்கள் முதலில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டினாலும், கொரோனா பரவலின் தீவிரத்தன்மையை உணர்ந்த மக்கள் தாமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்தனர். தற்போது அனைத்து மாநிலங்களிலும் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தப்பட்டுவிட்டதாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது,
“டெல்லியில் தகுதிவாய்ந்த 100 சதவீத நபர்களுக்கும், அதாவது 1.48 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்துவர்கள், ஏஎன்எம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆஷாக்கள், சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் தலைவணங்குகிறேன். மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்’’ என கூறி உள்ளார்.
தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16ம் தேதி தொடங்கியதில் இருந்து இதுவரை 2,53,37,557 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் நேற்று இரவு நிலவரப்படி 1,48,27,546 பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 1,05,10,011 மக்கள் இரண்டு டோஸ்களும் செலுத்தி உள்ளனர்.